விவிலியம்_படிப்பது_எப்படி?
விவிலியம் படிக்கும் முறையானது ஆங்கிலத்தில் சுருக்கமாக ‘பிரிமா’ முறை (PRIMA Method/முதன்மை) என்று அழைக்கப்படுகிறது (PRIMA: Pray > Read > Imagine > Meditate > Apply).
01. செபிப்போம்: ஆண்டவர் நம்மிடம் பேச விரும்புவது என்ன? அவரது திருவுளத்தை இந்த இறைவாக்கின்மூலம் நமக்கு உணர்த்திட வேண்டுமென்றும், ஆண்டவரோடு நாம் இன்னும் அதிகமாய் நெருங்கி வர விவிலியம் வகை செய்ய வேண்டுமென்றும் செபிப்போம்.
02. படிப்போம்.: ஆண்டவரைப் பற்றிய தளராப் பற்றுறுதியோடும், அவரது வாக்குறுதி பற்றிய மாறா நம்பிக்கையோடும் உயிருள்ள இறைவார்த்தையை வாசிக்கத் தொடங்குவோம்.
“திருமறைநூல்..இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது.”-2 திமொத்தேயு 3:15-16.
“ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;”-திருப்பாடல்கள் 25:4-5.
03. நினைத்துப் பார்ப்போம்: படித்த நிகழ்வுகளை/வரலாற்றை/புதுமைகளை/உவமைகளை/அருள் வார்த்தைகளை மனதிற்குள் அசைபோட்டு கற்பனை செய்து பார்ப்போம்.
04. சிந்திப்போம்: படித்த இறைவார்த்தையினை நமது தனிப்பட்ட வாழ்க்கையோடும், சமகாலச் சூழலோடும் ஒப்பிட்டுப் பார்த்து, நாம் இன்னும் எவ்வாறு ஆண்டவருக்குப் பிடித்தவண்ணம் வாழ முடியும்? எவ்வாறு பாவ வாழ்க்கையிலிருந்து விடுபடமுடியும்? அதற்குத் தடையாயிருப்பது என்ன?, நோயிலும், துன்பங்களிலும், இறைவனின் அருட்கரத்தைப் பற்றிப் பிடித்து தெய்வீக ஆறுதலையும், அரவணைப்பையும் பெற்றிட வேண்டி சிந்திப்போம்.
“நீங்கள் நம்பிக்கையில் நிலைத்திருக்கிறீர்களா என உங்களையே சோதித்துப் பாருங்கள். உங்கள் நடத்தையைச் சீர்தூக்கிப் பாருங்கள்..நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தீர்கள் என்றால் அதை உணர்வீர்கள்.”-2 கொரிந்தியர் 13:5.
05. செயல்படுத்துவோம்: எடுத்துக்கொண்ட உறுதியினை ஏற்றுச் செயல்படுத்துவோம்.
“என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!”-திருப்பாடல்கள் 119:105.
