தூய லூர்து அன்னை

தூய லூர்து அன்னை என்ற பெயர், பிரான்சு நாட்டின் லூர்து நகரில் 1858 பிப்ரவரி 11 முதல் 1858 ஜூலை 16 வரை தூய பெர்னதெத் சூபிரூஸ் என்ற பெண்ணுக்கு அன்னை மரியா அளித்த திருக்காட்சி அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்.

உள்ளடக்கம்:

01. மரியன்னையின் திருக்காட்சி

02. அமல உற்பவி

03. திருச்சபையின் ஆய்வும், ஏற்பளிப்பும்

04. குணமளிக்கும் நீரூற்று

05. நினைவு கெபிகள்

06. பழைமைவாய்ந்த லூர்து மாதா கோவில்கள்

01. மரியன்னையின் திருக்காட்சி

பிரான்சு நாட்டின் லூர்து நகரில் 1844 சனவரி 7-ஆம் நாள் பிறந்த தூய பெர்னதெத் சூபிரூஸ் தனது 14 வயதில், தனது சகோதரி மற்றும் தோழியுடன் விறகு பொறுக்கச் சென்றார். ஒருநாள் அவர்கள் பிரன்னீஸ் மலைத்தொடரில் லூர்து என்ற இடத்திலுள்ள மசபியேல் என்ற குகை (கெபி) அருகே சென்று கொண்டிருந்த வேளையில், பெர்னதெத் ஒரு காட்சியைக் கண்டார். மரியன்னை ஒரு இளம்பெண்ணாக இவருக்குக் காட்சி அளித்தார். பெர்னதெத் தன்னுடன் வந்த இருவரிடமும் "அதோ பாருங்கள் மிகவும் அழகான ஓர் இளம்பெண்" என்று கூறினார். இவரது சகோதரிக்கும், தோழிக்கும் எதுவும் தெரியவில்லை. செபமாலை சொல்லும்படி பெர்னதெத்துக்கு அழைப்பு விடுத்த அவ்விளம்பெண், பெர்னதத்தை மீண்டும் அதே இடத்திற்கு வரச் சொன்னார். அன்னை, நாளுக்கு ஒரு மறையுண்மை என்ற வகையில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறையுண்மைகள் அனைத்தையும் 15 காட்சிகளில் பெர்னதெத்தை செபிக்கச் செய்தார். 1858 பிப்ரவரி 11 முதல் சூலை 16 வரை முதல் 18 முறை இவர் மரியன்னையின் காட்சிகளைக் காண பேறுபெற்றார். இவர் பின்னே ஒரு கூட்டம் பக்தியுடனும், மற்றொரு கூட்டம் கேலியுடனும் பின் தொடர்ந்தன.

02. அமல உற்பவி

அவ்விடத்தில் தனது பெயரால் ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டுமென்று மரியன்னை பெர்னதெத்திடம் கூறினார். அன்னையின் வேண்டுகோளை பங்குத்தந்தையிடம் பெர்னதெத் சொன்னபோது அவர் அக்காட்சியை நம்ப மறுத்து, காட்சி அளித்த பெண்ணின் பெயரை கேட்டுக் வருமாறு சொல்லி அனுப்பினார். மரியா இவரிடம், “நானே அமல உற்பவம்” ("பாவமின்றிப் பிறந்தவர்"/"Que soy era Immaculada Concepciou") என்று தன்னைப் பற்றிக் கூறினார்.

03. திருச்சபையின் ஆய்வும், ஏற்பளிப்பும்

அதைத் தொடர்ந்து திருச்சபை அதிகாரிகள் காட்சியின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தனர். பெர்னதெத் 16-வது காட்சியைக் கண்டபோது (ஏப்ரல் 7ந்தேதி), இவர் கையில் இருந்த மெழுகுவர்த்தி தலைகீழாக எரிந்தது. சிலர் 15 நிமிடம் இவரது கையை மருத்துவ ஆய்வுக்காக தீயினால் சுட்டனர். அது இவரை ஒன்றுமே செய்யவில்லை. பெர்னதெத் அதை உணரவும் இல்லை, இவர் கையில் தீக்காயமும் ஏற்படவில்லை. கத்தோலிக்க திரு அவை இக்காட்சிகளை முதலில் ஏற்கத் தயங்கினாலும், இவற்றை ஆய்வு செய்த நிபுணர் குழு இக்காட்சிகள் நம்பத்தகுந்தவை என சான்றளித்தது. இக்காட்சிகளில் காணப்பட்டவர் இயேசுவின் தாய் மரியா என்பதை ஏற்று, அவரை "லூர்து அன்னை" என்று கத்தோலிக்க திரு அவை அழைக்கிறது.

04. குணமளிக்கும் நீரூற்று

ஒரு காட்சியின்போது (பிப்ரவரி 25ந்தேதி), மரியாவின் கட்டளையை ஏற்று பெர்னதெத் தோண்டிய ஊற்று நீர், அதைப் பருகுபவர்களின் நோய் தீர்க்கும் மருந்தாக இன்றும் செயல்படுகிறது. உலகிலேயே அதிக திருப்பயணிகள் செல்லும் திருத்தலமாக இன்று லூர்துநகர் திகழ்கிறது. அங்கு சென்றோர் யாருமே அன்னையின் ஆசியைப் பெறாமல் திரும்புவதில்லை. இதுவரை, அங்கு நிகழ்ந்துள்ள புதுமைகளில், 7, 000த்திற்கும் அதிகமானவை, அத்திருத்தல அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்பதிவுகள் மீது லூர்து நகரிலுள்ள பன்னாட்டு மருத்துவக் குழுவினால் ஆழமான மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை, பல புதுமைகள் அதிகாரப்பூர்வ புதுமைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

05. நினைவு கெபிகள்

லூர்து காட்சியின் நினைவாக உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க ஆலய வளாகங்கள் பலவற்றிலும் லூர்து அன்னை திருக்காட்சி அளித்த குகை வடிவப் பீடம் (கெபி/Grotto)அமைக்கப்பட்டுள்ளது. சாதி, சமய வேறுபாடின்றி மெழுகுவர்த்திகளைக் கையில் ஏந்தி, அன்னையின் அருள் வேண்டி இறைஞ்சும் எண்ணற்ற பக்தர்களை இங்குக் காணலாம்.

06. பழைமைவாய்ந்த லூர்து மாதா கோவில்கள்

புதுச்சேரி: வில்லியனூர் (1877)

சென்னை: சென்னை பெரம்பூர் (1880) http://www.lourdesshrineperambur.org/

திருவண்ணாமலை மாவட்டம்: சேத்துப்பட்டு-மரிவலம் (1896) https://www.vellorediocese.org/chetpet-shrine

திருநெல்வேலி மாவட்டம்: இடிந்தகரை (தங்கத்தேர்) 1906

திருச்சி மாவட்டம்: திருச்சி தூய வளனார் கல்லூரி (1910)

மதுரை மாவட்டம்: மதுரை கோ. புதூர் (1920) https://archdioceseofmadurai.com/parishes/lourdes-shrine-k-pudhur/

கன்னிமேரி மாவட்டம்: நாகர்கோவில் புன்னைநகர் (1946)

தஞ்சாவூர் மாவட்டம்: பூண்டி (1955) https://www.poondimadhabasilica.org/

சிங்கப்பூர்: Church of Our Lady of Lourdes (OLL), Little India, Singapore (1888) http://www.lourdes.sg/

மலேசியா: Church of Our Lady of Lourdes (OLL), Klang, Malaysia (1928) http://ollklang.org/.

நம்பினோருக்கு நலம் அருளும் தூய லூர்து அன்னையே! பாவிகளுக்கு அடைக்கலமே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!