இறைவருகைக் காலம் (திருவருகைக் காலம்)
முன்னுரை
நோக்கங்கள்
வரலாறு
திருவழிபாடு
அடையாளங்கள்
செபங்கள்
பாடல்கள்
முன்னுரை
‘இறைவருகை’ / ‘திருவருகை’ என்ற சொல் ‘பருசியா’ (‘παρουσία’) என்ற கிரேக்க மூலச் சொல்லிலிருந்து வருகிறது. இதன் இலத்தின் வடிவமாக ‘அத்வென்துஸ்’ / ‘அத்வென்திஸ்’ (‘Adventus’) என்ற சொல் இருக்கிறது (‘வருதல்’). இதிலிருந்துதான் ‘அட்வென்ட்’ (Advent) என்ற ஆங்கிலச் சொல் உருவாகியிருக்கிறது எனலாம்.
‘பரூசியா’ என்ற சொல் ஆரம்ப கால கிரேக்க நம்பிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட தெய்வத்தின் வருகையைக் குறித்தது. பின்னர் கிரேக்க-உரோமையர்கள் காலத்தில் இது ஆட்சியாளர்களின் வருகையைக் குறிக்க பயன்பட்டது. சீசர்கள், அரசர்கள், ஆட்சியாளர்கள் தங்கள் மக்களைச் சந்திக்க, அவர்கள் இடங்களுக்கு எப்போதாவது வருவது வழமை. அவர்களின் வருகைக்காக மக்கள் காத்திருப்பர். இந்நிகழ்வு அக்காலத்தில் வழக்கிலிருந்த ஒரு சாதாரண அரசியல் நிகழ்வு. இவ்வருகை மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை உருவாக்கியதால், மக்கள் அதனை எதிர்பார்த்தனர்.
கிறிஸ்தவம் வளர்ந்ததன் பின்னர், இயேசுவின் வருகையை நினைவூட்டும் விதமாக இந்த ‘பரூசியா’ என்ற சொல் பயன்படுத்தப்படலாயிற்று. இது இரண்டு விதமான வருகையை நமக்கு நினைவூட்டுகிறது:
முதலாவது வருகை மெசியாவின் பிறப்பிற்காகக் காத்திருந்த வருகையாகவும், இரண்டாவது வருகை மெசியா திரும்பவும் வருவதற்கான காத்திருத்தலாகவும் இருக்கின்றன.
ஆண்டவரின் மறுவருகையை திருத்தூதர் தூய பவுல் “மாரனாத்தா” (1 கொரிந்தியர் 16:22) என்ற அரமாயிக் சொல்லாடலைப் பயன்படுத்தி கொரிந்து திரு அவைக்கு நம்பிக்கையூட்டுகின்றார். அதன் பொருள் ‘ஆண்டவரே வாரும்’ என்பதாகும். ஆண்டுதோறும் அன்னையாம் திரு அவை ‘மாரனாத்தா ‘என்ற சொல்லாடலை திருவருகைக் காலத்தின் நம்பிக்கை முழக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்து பிறப்பிற்காகத் தயாரிப்பது, அதைக் கொண்டாடுவது என்பது நமக்குள் புதிய நம்பிக்கையைத் தட்டி எழுப்புகின்றது.
நோக்கங்கள்
- ஆண்டவரின் முதல் வருகையை-அவரது மானிட பிறப்புப் பெருவிழாவை நினைவூட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது.
- ஆண்டவரின் மறுவருகைக்காக நம்பிக்கையுடன் காத்திருப்பது.
வரலாறு
திருவருகைக் கால கொண்டாட்ட மரபானது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சின் தூர் மறைமாவட்ட ஆயர் பெர்பேத்துஸ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது, என்கிறார் தூர் நகர தூய கிரகோரி. இதன் நோக்கம் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாட 40 நாட்கள் ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்வது. கி.பி. 567-இல் கூட்டப்பட்ட தூர் திருச்சங்கம், தூர் நகர தூய மார்ட்டின் திருநாளில் (நவம்பர் 11) இந்த ஒறுத்தல் (தபசு) துவங்குவதாக குறிப்பிடுகின்றது. இதுவே திருவருகைக் காலத்தைப் பற்றிய முதல் குறிப்பாகும். தூர் மறைமாவட்டத்தில் மட்டும் அனுசரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் தயாரிப்பு தபசு, திருத்தந்தை தூய பெரிய கிரகோரி காலத்தில் (590-604) ஒரு கொண்டாட்டமாக மாறியது. பேரரசன் சார்ல்மாங் ஆட்சியில் தபசுடன் கூடிய ஒரு பெரும் விழாவாக உரோமைப் பேரரசில் உருவெடுத்தது.
கீழைத்தேய கிறிஸ்தவர்கள் இக்காலத்தில் கிறித்துமஸ் உணவுத்தவிர்ப்பு என்ற நிகழ்வை 40 நாட்களுக்கு தவமாக மேற்கொள்கின்றனர். இந்த மரபு பல காலங்களுக்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் வழக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.
திருவழிபாடு
கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கு அடுத்து வருகின்ற ஞாயிறே திருவருகைக் காலத்தின் தொடக்கமாகும். கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவிற்கு முன்பு வருகின்ற நான்கு ஞாயிற்றுக் கிழமைகள் திருவருகைக் காலமாகும்.
இந்நாட்களுக்கான வழிபாட்டு வாசகங்களின் கருப்பொருளாக இயேசுவின் இரண்டாம் வருகையும், அவரின் வரலாற்றுப் பிறப்பு நிகழ்வும் திகழ்கின்றன. ஐந்து வார திருவருகைக் கால அனுசரிப்பு தற்போது நான்கு வார தயாரிப்பாக மாறியுள்ளது. கத்தோலிக்க திரு அவை இந்நான்கு வாரங்களை இரண்டு பிரிவாகப் பிரித்துள்ளது.
- முதலாவது பகுதி (திருவருகைக் கால முதல் ஞாயிறிலிருந்து டிசம்பர் 16-ஆம் நாள் வரை): இயேசுவின் இரண்டாம் வருகைக்கான ஆயத்த நாட்கள் (பரூசியா)
- இரண்டாவது பகுதி (டிசம்பர் 17-ஆம் நாளிலிருந்து டிசம்பர் 24-ஆம் நாள் வரை-திருவருகைக் காலத்தின் இறுதி எட்டு நாள்கள்): இயேசுவின் முதலாவது வருகையான அவரது வரலாற்றுப் பிறப்பு மகிழ்ச்சியை நினைவு கூறும் நாட்கள் (கிறித்துமஸ்).
இந்த காலம் ஆயத்தக் காலமாக இருப்பதனால், தபசு காலத்தைப்போல் ஊதா நிற ஆடைகள் வழிபாட்டில் அணியப்படுகின்றன.
திருவருகைக் காலத்தில் இயேசுவின் மறுவருகையை முன்னிறுத்தி விவிலியப் பகுதிகள், இறைவேண்டல்கள் தரப்படுகின்றன. வெறும் கொண்டாட்டமாக மட்டும் கடந்து சென்றுவிடாமல், முந்தய காலத்தின் ஒறுத்தல் முயற்சிகளையும் திரு அவை வலியுறுத்துகிறது. கிறிஸ்து பிறப்பை அர்த்தமுள்ளதாக மாற்ற பல்வேறு இறைநம்பிக்கை அடையாளங்களை கையாளுவதும் சிறப்பு.
திருவருகைக் காலத்தில் “உன்னதங்களிலே” சொல்லப்படுவதில்லை.
அடையாளங்கள்
இக்காலத்தில் திருவருகைக் கால மலர்வளையம், திருவருகைக் கால மெழுகுவர்த்தி, திருவருகைக் கால / கிறித்துமஸ் பாடல்கள், திருவருகைக் கால கால அட்டவணை, கிறித்துமஸ் சோடினைகள், மற்றும் கிறித்துமஸ் கொண்டாட்டங்கள்.
திருவருகைக் கால இளந்தளிர் வளையம் / மலர்வளையம்:
திருவருகைக் கால நான்கு ஞாயிற்றுக் கிழமைகளை வரவேற்கும் விதத்தில் திருவருகைக் கால மலர்வளையங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. திருவருகைக்கால மலர்வளையங்கள் கிறிஸ்துவில் மலரும் நிறைவாழ்வைப் பற்றி அறிவிக்கின்றன. இவ்வழக்கம் 16-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் கத்தோலிக்கர் மற்றும் லூத்தரன் கிறிஸ்தவர்களிடையே தோன்றியது.
பசுமை இலைகளினால் ஆக்கப்பட்ட திருவருகைக் கால மலர்வளையம் அழகானது. பல்வேறு பசுமையான இலைகளினால் அமைக்கப்பட்ட இவ்வளையம் வாழ்வின் தொடர்ச்சியையும், அதன் வளமையையும் குறித்து நிற்கின்றது. குறிப்பாக இவ்வளையம் உருவாக்கப் பயன்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் சிறப்பான கருத்துக்களை உள்ளடக்கி நிற்கின்றன.
இந்த வளையம் ஒரு வெற்றிச்சின்னம். அதாவது துன்பத்தின் மீதும்,துன்புறுத்தலின் மீதும் வெற்றி கொள்வதைக் குறிக்கின்றது. அங்குள்ள ஊசியிலைகள், கரும்பச்சை நிற இலைகள், மரப்பட்டை என்பன அழியாமையையும் – என்றும் உதிராமல் இருக்கும் மரத்தின் இலைகள் பலத்தையும், குணமளித்தலையும் குறிப்பதோடு இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து முடிவில்லாக் கடவுளின் பிரசன்னத்தையும், ஆன்மாவின் அழியாமையையும், கிறிஸ்துவிடம் முடிவில்லா வாழ்வைக் கண்டு கொள்ள முடியும் என்பதனையும், வாழ்வையும், உயிர்த்தெழுதலையும் குறித்து நிற்கின்றன.
துன்பத்திலிருந்து வெற்றி கொண்டதையும், நிலைவாழ்வையும் இந்த இளந்தளிர் குறிக்கிறது.
முள் இலைகள் இயேசுவின் முள்முடியையும், இளந்தளிர் வளையம் ஆன்மாவின் நிலைவாழ்வையும், முள் கட்டைகள் இயேசுவின் உயிர்ப்பையும் குறிக்கிறது.
திருவருகைக் கால மெழுகுவர்த்தி:
திருவருகைக் கால நான்கு வாரங்களில் முதலாவது வாரத்தில் ஊதா நிறம் கொண்ட நம்பிக்கையின் மெழுகுவர்த்தியும் (‘இறைவாக்கின் மெழுகுவர்த்தி’), இரண்டாவது வாரத்தில் ஊதா நிறம் கொண்ட அமைதியின் மெழுகுவர்த்தியும் (‘வானதூதர் மெழுகுவர்த்தி’), மூன்றாவது வாரத்தில் இளஞ்சிவப்பு அல்லது ரோசா நிறம் கொண்ட பேருவகை/பெருமகிழ்ச்சியின் மெழுகுவர்த்தியும், நான்காம் வாரத்தில் ஊதா நிறம் கொண்ட அன்பின் மெழுகுவர்த்தியும் (‘பெத்லேகேம் மெழுகுவர்த்தி’), ஏற்றப்படுகின்றன.
இருபத்தி நான்காம் நாள் மாலைப் பொழுதில் ஆண்டவரின் பிறப்பைக் குறிக்கும் விதமாக வெள்ளை நிறம் கொண்ட ஐந்தாவது மெழுகுவர்த்தி ஒன்றும் ஏற்றப்படுகின்றது.
திருவருகைக்கால மலர்வளையத்தில் வைக்கப்படும் இந்நான்கு மெழுகுவர்த்திகள் ‘ஒளியாம் இறைவன்’ கிறிஸ்து பிறப்பு மூலம் தன் மக்களைச் சந்திக்க வருகின்றார் என்ற செய்தியைத் தருகின்றன. ஒவ்வொரு ஞாயிறன்றும் ஒவ்வொரு புதிய இறைச்செய்தியுடனும் இத்திரிகள் ஏற்றப்படுகின்றன.
- 01. நம்பிக்கையின் திரி: கிறிஸ்துவின் பிறப்பை முன்னறிவித்த முதுபெரும் தந்தையர் (ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு) மற்றும் இறைவாக்கினர்களைக் குறித்து நம்பிக்கையின் ஒளியாக ஏற்றப்படுகிறது. இது ‘இறைவாக்கின் மெழுகுவர்த்தி’ எனவும், ‘எதிர்நோக்கின் மெழுகுவர்த்தி’ எனவும் அழைக்கப்படும். இத்திரியின் நிறம் ஊதா. இந்நிறம் செபம், தபம், தியாகம் மற்றும் தயாரிப்பை அறிவுறுத்துகின்றது.
- 02. அமைதியின் திரி: கிறிஸ்துவின் பிறப்பினால் உலகம் அனுபவிக்கும் அமைதியை அறிவிக்கும் வானதூதர்களைக் குறித்து அமைதியின் ஒளியாக ஏற்றப்படுகிறது. கிறிஸ்துவின் அமைதி நல்லெண்ணம் கொண்ட யாவரையும் நிரப்புகின்றது. இத்திரியின் நிறம் ஊதா.
- 03. மகிழ்ச்சியின் திரி: இளஞ்சிவப்பு நிறத்திலுள்ள இத்திரி, இயேசு பிறந்தவுடன் அவரைக் காணவந்த இடையர்களைக் குறித்து பெருமகிழ்ச்சியின் ஒளியாக ஏற்றப்படுகிறது. இறைவனால் வாக்களிக்கப்பட்ட மீட்பரின் பிறப்பைக் கொண்டாடும் மட்டற்ற மகிழ்ச்சியை இத்திரி அறிவிக்கின்றது.
- 04. அன்பின் திரி: கிறிஸ்துவின் பிறப்பிற்கு ஆயத்தமாக பெத்லகேம் நோக்கி பயணித்த தூய கன்னி மரியாவையும், தூய யோசேப்பையும் குறித்து அன்பின் ஒளியாக ஏற்றப்படுகிறது. இது ‘பெத்லகேம் மெழுகுவர்த்தி’ எனவும் அழைக்கப்படும். இத்திரியின் நிறமும் ஊதா.
- 05. கிறிஸ்துவின் திரி: இறுதியாக, கிறிஸ்து பிறப்பு இரவில் இத்திரிகளுக்கு நடுவில் வெள்ளைநிற திரி ஏற்றப்பட்டு, ‘கடவுள் நம்மோடு’ என்ற மாபெரும் மகிழ்ச்சியூட்டும் செய்தியைத் தருகிறது. மேலும் வெள்ளை நிற இத்திரி இயேசு தூய்மையும், நன்மையும் நிறைந்த நமது மீட்பர் என்பதைக் குறிக்கிறது.
செபங்கள்
கிறிஸ்து பிறப்புக்கு ஆயத்த செபம்
பெத்லகேமில் நடுங்கும் குளிரில் நடுச்சாமத்தில் மிகவும் பரிசுத்த கன்னி மரியிடம், தேவசுதன் பிறந்த மணியும், நேரமும் ஆசீர்வதிக்கப் படக்கடவது. அந்த மணி நேரத்தில் ஓ! என் சர்வேசுரா, எங்கள் இரட்சகராகிய இயேசுக் கிறிஸ்து நாதருடையவும், அவருடைய திரு மாதாவுடையவும் பேறு பலன்களைக் குறித்து என் மன்றாட்டுக்கு இரங்கி நான் கேட்பவைகளைத் தர கிருபை புரிவீராக!
(வேண்டியதை உறுதியுடன் கேட்கவும்)
இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம், ஆமென்!
விண்ணுலகில் இருக்கிற…(1)
அருள் நிறைந்த மரியே…(3)
தந்தைக்கும், மகனுக்கும்…(1)
பாடல்கள்
01. தேவ ராஜன் வருவார்.
முதல்வர்: தேவ ராஜன் வருவார். வாரும் ஆராதிப்போமே!
- சீயோனே அகமகிழ்வாய், எருசலேம் மகளே பூரிப்படைவாய் இதோ ஆண்டவர் வருவார். அந்நாளில் பேரோளி வீசும், மலைகள் இன்பம் துளிர்க்கும், குன்றுகள் பாலும் தேனும் பொழியும் ஏனெனில் மாபெரும் தீர்க்கதரிசி வருவார். அவர் எருசலேமைச் சீராக்குவார். (தேவ)
- இதோ தாவீதின் குலத்தினின்று மனு தேவன் வருவார். அவர் சிம்மாசனம் ஏறுவதைக் காண்பீர். அந்நாள் நீங்கள் ஆனந்தம் கொள்வீர். (தேவ)
- இதோ நம் காவலரான ஆண்டவர் வருவார். அவர் சிரமதில் முடி சூடிய இஸ்ராயேலின் ராயர். ஒரு கடல் முதல் மறு கடல் வரை பூமியின் ஒரு கோடி முதல் மறு கோடி வரை யாவையும் அடக்கி ஆட்சி ஆளுவார். (தேவ)
- இதோ ஆண்டவர் தோன்றுவார். அவர் சொல்லோ பொய்யாகா. அவர் தாமதம் செய்தாலும் எதிர்பாருங்கள், ஏனெனில் தாமதிக்காமல் வருவார். (தேவ)
- அன்று ஆட்டுத்தோல் மீது பெய்த மழைபோல் ஆண்டவர் இறங்குவார். அந்நாளில் நீதியும் சமாதானமும் செழிக்கும், பூமி ஆளும் வேந்தர் எல்லோரும் அவரை வணங்குவர். மாந்தர் எல்லோரும் போற்றி சேவிப்பர். (தேவ)
- நமக்கெனப் பாலன் பிறப்பார். அவரை வல்லபதேவன் என்பர். தம்முடைய தந்தை தாவீதின் சிம்மாசனம் ஏறி அவர் செங்கோல் செலுத்துவார். அவரது வல்லபத்தை அவர் தோளிலே காண்பீர். (தேவ)
- உன்னத கடவுளின் நகரமான பெத்லகேமே, உன்னிடமிருந்தே இஸ்ராயேலின் அதிபர் எழுந்தருள்வார். அவர் வருகை நித்திய நாட்களின் துவக்கத்திலிருந்தது போல் ஆகும். அவரை உலகெல்லாம் போற்றிப் புகழும். அவர் வருங்கால் நம் நாட்டில் சமாதானமே நிலைக்கும். (தேவ)
02. கருணைக் கடலே வா
கருணைக் கடலே வா
கதித்த தயாபரா வா
சுருதி மறையோருக்கு சுடரொளியே வா -2
- ஆதோனாய் ஆனந்தமே
ஆவலுடன் காத்திருக்கும்
அடியார்களைச் சந்திக்க
கருணைக் கடலே வா
கதித்த தயாபரா வா
சுருதி மறையோருக்கு சுடரொளியே வா!
- இம்மானுவேல் ஏகநாதா
எங்கள் பாவ தோசம் தீர
ஏன் இன்னும் வரத் தாமதம்?
கருணைக் கடலே வா
கதித்த தயாபரா வா
சுருதி மறையோருக்கு சுடரொளியே வா!
03. வானமே மகிழ்வாய்
- வானமே மகிழ்வாய், பூமியே பூரிப்படைவாய், மலைகளே ஆனந்தம் கொள்வீர்.
- மலைகள் இன்பம் பொழிவதாக, குன்றுகள் நீதியை தருவதாக.
- ஏனெனில் வருவார் நம் ஆண்டவர், தம் எளியோர் மேல் இரக்கம் கொள்வார்.
- வானங்களே, மேல் நின்று நீதிமானைப் பனிபோல் பெய்யுங்கள், மேகங்களும் நீதிமானைப் பொழிக, மாநிலம் திறந்து மீட்பரைப் பிறக்கச் செய்க.
- ஆண்டவர், எங்களை நினைவு கூரும். உமது மீட்புடன் எம்மைக் காண வாரும்.
- ஆண்டவரே, எங்கள் மேல் கருணை காட்டி எம்மை ஈடேற்றும் சுவாமி.
- உலகாளும் செம்மறிப்புருவையே, பாலைவனப் பாறையினின்று சீயோன் மகளின் மலைக்கனுப்பிடும் சுவாமி.
- வல்லபக் கடவுளாகிய ஆண்டவரே, எம்மை விடுவிக்க வாரும். உம் திருமுக்த்தைக் காட்டும். நாங்கள் ஈடேற்றம் அடைவோம்.
- வாரும் ஆண்டவா, அமைதியில் எம்மைக் காண உத்தம உள்ளத்துடன் உம்மைக் கண்டுகளிப்போம்.
- பூவுலகில் உம் திரு வழிகளையும் எல்லா நாட்டினர் மத்தியில் உமது இரட்சிப்பையும் கண்டறிவோம்.
- வாரும், உமது வல்லமை எல்லாம் கொண்டு எம்மை மீட்டுக் காத்திடும் சுவாமி
- ஆண்டவா, காலதாமதம் செய்யாமல் வாரும் நும் மக்களின் பாவக் கட்டவிழ்த்துத் தாரும்
- வானைப் பிளந்து எந்நாள் இறங்கி வருவீரோ நும் கனி முகத்தைக கண்டாலோ மலைகளும் உருகிப்பாயுமே
- வானோர்க்கு மேல் வீற்றிருக்கும் தேவா வாரும் உம் திருமுகத்தை எமக்கு காண்பித்தருள்வீரே!
