இறை இரக்க பக்தி: இறை இரக்கமுள்ள இயேசுவின் படம் (மெய்யுரு)

1931-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் நாள் அருட்சகோதரி மரிய பவுஸ்தினாவிற்கு இயேசு காட்சி அளித்தபோது அவர் வெண்ணிற ஆடை அணிந்திருந்தவராகத் தோன்றினார். அவரது ஒரு கரம் ஆசீர்வதித்தபடி உயர்த்தியும், மற்ற கரம் மார்பின் வெண்ணிற ஆடை பகுதியைத் தொட்டபடியும் இருந்தது. அவர் தொட்ட இடத்திலிருந்து இரண்டு பெரிய ஒளிக்கதிர்கள், ஒன்று சிவப்பு நிறத்திலும் மற்றது வெளிர் நிறத்திலும் வெளிவந்தன. ‘நீ இப்போது காணும் இந்த உருவத்தை, “இயேசுவே! நான் உம்மை நம்புகின்றேன்” என்ற சொற்களோடு அப்படியே வரைந்திடு.‘ என்று இயேசு அவருக்குக் கூறினார்.

அருட்பணி ஸ்போக்கோ தான் பணியாற்றிய அதே பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், கலைஞருமான Eugene Kazimierowski என்பவரை, 1934-ஆம் ஆண்டு சனவரியில் அருட்சகோதரி பவுஸ்தீனாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அச்சகோதரி விவரித்தது போன்றதோர் உருவப்படத்தை, அதே ஆண்டு ஜூனில் வரைந்து முடித்தார், Kazimierowski. இந்த இறை இரக்க இயேசுவின் திருவுருவப் படமே அருட்சகோதரி பவுஸ்தீனா காட்சியில் கண்ட இயேசுவின் உருவம் போன்றதாகும்.

"இச்சாயலுக்கு பெருமதிப்புக் கொடுத்து, திருநிலைப்படுத்தும் எவ்வான்மாவும் அழிந்து போகாது என நான் வாக்களிக்கிறேன். அத்தோடு அவ்வான்மாவின் இவ்வுலக எதிரியிடமிருந்தும், குறிப்பாக மரணவேளையிலும், மரணத்தின் மீது நான் கொண்ட எனது வெற்றிப் பெருமையையும் வாக்களிக்கின்றேன். மேலும் என் சொந்த மகிமையைப் போன்று அவ்வான்மாவை நானே பாதுகாப்பேன்" என்றும் இயேசு கூறினார். (கையேடு 47, 48)

அந்த இரு ஒளிக்கதிர்களுக்கு விளக்கம் கேட்டபோது அவை தமது இதயத்திலிருந்து வெளிப்பட்ட இரத்தத்தையும், தண்ணீரையும் குறிக்கின்றன என்றும், வெளிர் நிறக் கதிர் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் தண்ணீருக்கும், சிவப்பு நிறக் கதிர் ஆன்மாக்களை உயிரூட்டம் உள்ளதாக்கும் இரத்தத்திற்கும் அடையாளமாக இருக்கின்றன என்றும் விளக்கிய இயேசு, இக்கதிர்கள் தந்தையின் கோபத்திலிருந்து உங்கள் ஆன்மாவைப் பாதுகாக்கின்றன. இதன் அடைக்கலத்தில் வாழ்பவன் பேறுபெற்றவன். ஏனெனில், இறைவனின் நீதிக்கரம் அவனை ஒருபோதும் தீண்டாது என்று கூறினார்.

"பெரும் வேதனைப்பட்ட எனது இதயம் சிலுவையிலே குத்தீட்டியால் திறக்கப்பட்ட வேளையில் கனிவிரக்கம் கொண்ட இதய ஆழத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட இரு கதிர்கள் இவைதான். இக்கதிர்களுக்குள் அடைக்கலம் பெறுவோர் பேறுபெற்றோர். ஏனெனில், இறைவனின் நீதிக்கரத்தில் இவர்கள் அகப்படாமல் பாதுகாக்கப்படுவார்கள்." (கையேடு 299)

"எனது பொங்கிப்பாயும் இரக்க அருளை நோக்கி மக்கள் வருவதற்கு நான் அவர்களுக்கு ஒரு கப்பலைக் கொடுக்கின்றேன். "இயேசுவே நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்" என ஒப்பமிடப்பட்ட எனது சாயல் தான் அந்த கப்பல்." (கையேடு 327)

"இந்த சாயலை முதலில் உனது செபக்கூடத்திலும், (பின்பு) உலகின் எல்லாப் பகுதிகளிலும் பெருமதிப்புக் கொடுத்து திருநிலைப்படுத்தவேண்டும் என்பதே எனது விருப்பம்." (கையேடு 47)

தன்னுடைய வழிகாட்டலுடன் வரையப்பட்ட மூலப்பிரதியைக் கண்டபோது தூய பவுஸ்தீனா நீர் இருக்கிற அழகுருவைப் போல் யாரால் உம்மை வரைய முடியும்? என அழுது, மிகுந்த ஏமாற்றத்தோடு இயேசுவிடம் முறையிட்டார். அதற்கு மறுமொழியாக ஆண்டவர்: "சாயலின் உருவமுறை முக்கியமானதல்ல. இச்சாயலின் முக்கியத்துவம் நிறங்களின் அழகினிலோ, துகில்களின் வரிகளிலோ இல்லை. ஆனால், இரக்கத்தோடு செயல்பட்டு இச்சாயலின்மேல் நம்பிக்கை வைக்கும் ஆன்மாவுக்கு நான் வழங்கும் எனதருளில்தான் தங்கியிருக்கின்றது" என்று கூறினார்.

வாசல்