இறை இரக்க பக்தி: இறை இரக்கத்தின் நவநாள்

இந்த நவநாளை எப்போதும் செய்யலாம். ஆயினும், சிறப்பாக இறை இரக்கத்தின் திருநாளுக்குத் தயாரிப்பாகச் செய்யப்படுவதை ஆண்டவர் விரும்புகிறார். அதாவது, பெரிய வெள்ளியன்று தொடங்கி இறை இரக்கத்தின் திருநாளுடன் இந்த நவநாள் முடிவடையும். இந்த நவநாளைக் கடைபிடிக்கும் முறையையும் இயேசு கிறிஸ்து தாமே அருட்சகோதரி மரிய பவுஸ்தினாவிற்குக் கற்பித்தார்:

"ஒன்பது நாட்களிலும் எனது இரக்கத்தின் ஊற்றுக்கு ஆன்மாக்களை அழைத்து வர வேண்டும். அவர்கள் வாழ்வின் சோதனைகளின் போது, சிறப்பாக, இறப்பின் வேளையில் அந்த ஊற்றிலிருந்து பலமும், உற்சாகமும் பெறுவதோடு தமக்குத் தேவையான எல்லா அருள்வரங்களையும் அடைந்து கொள்வார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான ஆன்மாக்களை அழைத்து வந்து, எனது இரக்கக் கடலில் மூழ்க விடு. ஒவ்வொரு நாளும் இந்த ஆன்மாக்களுக்குத் தேவையான அருள்வரங்களை எனது கசப்பான பாடுகளின் வழியாக தந்தையிடம் இரந்து கேள்.“

1-ஆம் நாள்: உலக மக்கள் மற்றும் பாவிகள் அனைவருக்காக

2-ஆம் நாள்: அருட்பணியாளர்கள், கன்னியர், துறவறத்தார் அனைவருக்காக

3-ஆம் நாள்: நம்பிக்கையாளர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்காக

4-ஆம் நாள்: கடவுளைப் பற்றி அறியாதவர்கள், தெரியாதவர்கள் அனைவருக்காக

5-ஆம் நாள்: நம்மை விட்டுப் பிரிந்த சகோதர, சகோதரிகள் அனைவருக்காக

6-ஆம் நாள்: குழந்தைகள் மற்றும் சாந்தமும், தாழ்ச்சியுமுள்ளவர் அனைவருக்காக

7-ஆம் நாள்: இறைவனின் இரக்கத்தைச் சிறப்பாக மதித்து ஆராதிப்பவர்கள் அனைவருக்காக

8-ஆம் நாள்: உத்தரிக்கும் தலத்தில் உள்ள ஆன்மாக்கள் அனைவருக்காக

9-ஆம் நாள் : வெதுவெதுப்பாயுள்ள ஆன்மாக்கள் அனைவருக்காக

ஒன்றாம் நாள்

“இன்று, மனுக்குலம் முழுவதையும், சிறப்பாக பாவிகள் அனைவரையும் என்னிடம் கூட்டி வந்து, என் இரக்கக் கடலில் முழ்க வை. இதன் மூலம், ஆன்மாக்களின் இழப்பினால் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ள எனக்கு ஆறுதலளிப்பாய்.”

மனுக்குலம் முழுவதும், குறிப்பாகப் பாவிகள் இறைவனின் இரக்கத்தை அடைய வேண்டுமென்று செபிப்போமாக!

முத: இரக்கம் நிறைந்த இயேசுவே! எங்களுக்கு இரக்கமும், மன்னிப்பும் அளிப்பவரே! எமது பாவங்களைப் பாராமல் உமது அளவற்ற நன்மைத்தனத்தில் நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பாரும். கருணை மிகுந்த உமது இதய இல்லத்தில் எங்களை ஏற்றுக் கொள்ளும். எவரும் அதிலிருந்து பிரிந்து போக விடாதேயும். மூவொரு இறைவனில் தந்தையோடும், தூய ஆவியாரோடும் உம்மைப் பிணைக்கும் அன்பினால் உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்!

எல்: ஆமென்!

1 கர்த்தர் கற்பித்த செபம், 1 மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்

முத: எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! உமது திருமகனும், எமதாண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த இதயத்திலே நம்பிக்கை வைத்துள்ள மனுக்குலத்தின் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். அவரது துயரம் நிறைந்த பாடுகளைப் பார்த்து எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும். எல்லாம் வல்ல உமது இரக்கத்தை என்றென்றும் போற்றுவோமாக!

எல்: ஆமென்!

இரண்டாம் நாள்

“இன்று, குருக்கள், துறவியரின் ஆன்மாக்களை என்னிடம் அழைத்து வந்து ஆழங்காண முடியாத எனது இரக்கத்தில் மூழ்கவிடு. எனது கசப்பான பாடுகளை நான் சகித்துக் கொள்ள எனக்கு சக்தியளித்தவர்கள் இவர்கள்தாம். வாய்க்கால்களாகிய இவர்கள் வழியாக எனது இரக்கம் மனுக்குலத்தின் மேல் பாய்கிறது.”

இறைவனின் இரக்கம் மனுக்குலத்தின் மீது பெருகுவதற்கு வழியாயிருக்கும் அருட்பணியாளர்கள், துறவியர் அனைவருக்காகவும் செபிப்போமாக!

முத: இரக்கம் நிறைந்த இயேசுவே! உம்மிடமிருந்தே எல்லா நன்மையும் வருகின்றன. குருக்கள், துறவியர், கன்னியர்களின் ஆன்மாக்களில் உமது அருட்கொடைகள் பெருகச் செய்யும். அதனால் அவர்கள் தமது பணிகளை தக்கவிதமாகவும், பயன்தரக்கூடியதாகவும் நிறைவேற்றி, தமது சொல்லாலும், வாழ்வாலும் அனைவரையும் இறை இரக்கத்தில் பக்தி வணக்கம் கொள்ளச் செய்வார்களாக!

எல்: ஆமென்!

1 கர்த்தர் கற்பித்த செபம், 1 மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்

முத: எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! உமது திராட்சைத் தோட்டத்திற்கென நீர் தெரிந்துள்ள உமது குருக்கள், கன்னியர், துறவியரின் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது திருமகனின் தனிச்சிறப்பான அன்புக்குப் பாத்திரமான இவர்களை உமது ஆசீரால் உறுதிப்படுத்தி, பிறரை மீட்பின் பாதையில் வழிநடத்தும் ஞானத்தையும், உமது இரக்கத்தை நோக்கி அவர்களை ஈர்க்கின்ற சக்தியையும் இவர்களுக்கு அளித்தருளும்.

எல்: ஆமென்!

மூன்றாம் நாள்

“இன்று, பக்திப் பிரமாணிக்கமுள்ள அனைத்து ஆன்மாக்களையும் அழைத்து வந்து, என் இரக்கக் கடலில் மூழ்கவை. என் சிலுவையின் பாதையில் இவர்கள் எனக்கு ஆறுதலாய் இருந்தார்கள். கசப்பான துயரக்கடலின் நடுவில் எனக்கு கிடைத்த ஒரு துளி ஆறுதல் இவர்கள்தான்.”

பிரமாணிக்கமுள்ள கிறிஸ்தவர்கள் அனைவருக்காகவும் செபிப்போமாக!

முத: இரக்கம் நிறைந்த இயேசுவே! உமது இரக்கக் கருவூலத்திலிருந்து எல்லாருக்கும் உமது அருளை ஏராளமாகப் பொழிகின்றீர். இரக்கத்தின் இருப்பிடமாகிய உமது இதயத்தினுள் விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஏற்றருளும். அங்கிருந்து அவர்கள் பிரிந்து போகவிடாதேயும். ஆவியோடு உம்மைப் பிணைக்கும் அன்பில் பேரால் உம்மை இரந்து மன்றாடுகிறோம்!

எல்: ஆமென்!

1 கர்த்தர் கற்பித்த செபம், 1 மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்

முத: எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! உமது திருமகனின் வாரிசுகளாகிய விசுவாசிகள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம் நிறைந்த அவரது திருப்பாடுகளின் பெயரால் இவர்களுக்கு உமது ஆசீரை வழங்கி, உமது இடைவிடாத பராமரிப்பால் இவர்களை அரவணைத்துக் கொள்ளும். இதனால் அவர்கள், உம்மீது கொண்ட அன்பையும், தமது விசுவாசத்தையும் ஒருபோதும் இழக்காமல் தேவதூதர், புனிதர் சேனைகளுடன் உமது எல்லையில்லா இரக்கத்தை என்றென்றும் மாட்சிப்படுத்துவார்களாக!

எல்: ஆமென்!

நான்காம் நாள்

“இன்று, என்னை விசுவசியாதவர்களையும், இன்னும் என்னை அறியாதவர்களையும் என்னிடம் அழைத்துவா. எனது கசப்பான பாடுகளின்போது இவர்களையும் நினைத்துக்கொண்டேன். என்னை அறியவேண்டுமென்ற இவர்களது எதிர்கால ஆர்வம் என் இதயத்திற்கு ஆறுதலாய் இருந்தது. என் இரக்கமாகிய மாபெரும் கடலில் இவர்களை ஆழ்த்திவிடு.”

இறைவனின் இரக்கத்தை இன்னும் அறியாத மக்களுக்காகச் செபிப்போமாக!

முத: இரக்கம் நிறைந்த இயேசுவே! நீரே உலகின் ஒளி. உம்மை இன்னும் அறியாத மக்களை, இரக்கத்தின் உறைவிடமாகிய உமது இதயத்தினுள் ஏற்றருளும். உமது அருட்கதிர்கள் இவர்களுக்கு ஒளியூட்ட இவர்களும் எம்மோடு இணைந்து, என்றென்றும் உமது அற்புதமான இரக்கத்தைப் போற்றுவார்களாக!

எல்: ஆமென்!

1 கர்த்தர் கற்பித்த செபம், 1 மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்

முத: எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! உமது திருமகனும், எமதாண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த இதயத்தை விசுவசியாதவர்கள் மீதும், இன்னும் அறியாத மக்கள் மீதும் கருணைக் கண்நோக்கியருளும். இவர்களை நற்செய்தியின் ஒளிக்கு இழுத்தருளும். உம்மை அன்பு செய்வது எத்துணை இன்பம் என்பதை உணர்ந்து, இவர்களும் உமது இரக்கத்தை ஊழியுள்ள காலமும் வாழ்த்த வரமருளும்.

எல்: ஆமென்!

ஐந்தாம் நாள்

“இன்று, பிரிந்து போன சகோதரர்களின் ஆன்மாக்களைக் கொணர்ந்து என் இரக்கப் பெருங்கடலில் அமிழ்த்து. என் கசப்பான பாடுகளின் போது எனது உடலையும், உள்ளத்தையும் இவர்கள் கிழித்தவர்கள். திருச்சபையின் ஒற்றுமைக்கு இவர்கள் திரும்பி வந்து சேர்ந்தால்தான் என் காயங்கள் குணமாகும். இதன் வழியாக என் பாடுகளின் அகோரத்தை தணிப்பார்கள்.”

நம்பிக்கையில் தவறுவோருக்காகச் செபிப்போமாக!

முத: இரக்கம் நிறைந்த இயேசுவே! நன்மையின் உருவே! உம்மிடம் ஒளியைத் தேடும் எவரையும் நீர் மறந்ததில்லை. பிரிந்துபோன எம் சகோதரர்களை இரக்கத்தின் உறைவிடமாகிய உமது இதயத்தினுள் ஏற்றருளும். திருச்சபையின் ஒன்றிப்பில் இவர்கள் இணைய உமது ஒளியை இவர்களுக்கு அளித்தருளும். அவர்களும் எம்மோடு சேர்ந்து என்றென்றும் உமது இரக்கக் கொடைகளை வணங்குவார்களாக!

எல்: ஆமென்!

1 கர்த்தர் கற்பித்த செபம், 1 மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்

முத: எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! பிரிந்துபோன எமது சகோதரர்களின் ஆன்மாக்கள் மீது சிறப்பாக உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். அவர்களது குறைகளைப் பாராமல், ‘அவர்கள் அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாக’ என்று தமது இறப்பிற்கு முந்திய நாள் உம்மை உருக்கமாக வேண்டிய உமது திருமகனின் அன்பையும், அவர் அனுபவித்த கசப்பான பாடுகளையும் பார்த்தருளும். இவர்கள் மீண்டும் அந்த ஒன்றிப்பில் இணைந்து என்றென்றும் உமது இரக்கத்தைப் போற்றுவார்களாக!

எல்: ஆமென்!

ஆறாம் நாள்

“இன்று, சாந்தமும், தாழ்ச்சியுமுள்ள ஆன்மாக்களையும், சிறுகுழந்தைகளின் ஆன்மாக்களையும் என்னிடம் அழைத்துவா. என் இரக்கத்தில் மூழ்க வை. இவர்கள் என் இதய கசப்பான வேதனையின் போது எனக்குச் சக்தியளித்தவர்கள். எனது பீடங்களின் அடியில் கண்விழித்துக் காத்திருக்கும் உலக வானதூதர்களாக இவர்களைக் காண்கிறேன். இவர்கள்மேல் என் அருளைப் பொழிகின்றேன். தாழ்மையான ஆன்மாக்கள் மட்டுமே எனது அருளைப் பெற முடியும். இவர்கள் மட்டுமே என் நம்பிக்கைக்கு உரியவர்கள்.”

சிறு குழந்தைகளுக்காகவும், அவர்களைப் போல் ஆகியவர்களுக்காகவும் செபிப்போமாக!

முத: இரக்கம் நிறைந்த இயேசுவே! “நான் சாந்தமும், மனத்தாழ்ச்சியும் உள்ளவன். என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்” என்று நீர்தாமே சொல்லியிருக்கிறீர். சாந்தமும், மனத்தாழ்ச்சியுமுள்ள ஆன்மாக்களையும், சிறு குழந்தைகளின் ஆன்மாக்களையும் இரக்கம் மிகுந்த உம் இதய வீட்டில் ஏற்றருளும். இவர்கள் வானுலகைப் பரவசத்தில் ஆழ்த்தி, உமது விண்ணகத் தந்தையின் அரியாசனத்தின் முன் மணம் வீசும் மலர்களாக விளங்குவார்களாக! உமது திரு இதயத்தில் நிலையான இடம் கொண்டு இறைவனின் இரக்கத்தை இடையறாது போற்றுவார்களாக!

எல்: ஆமென்!

1 கர்த்தர் கற்பித்த செபம், 1 மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்

முத: எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ள உம் அடியார்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இவர்கள் உமது திருமகனின் சாயலை மிகவும் ஒத்திருக்கிறார்கள். இவ்வான்மாக்களின் நறுமணம் மண்ணுலகிலிருந்து எழுந்து, உமது அரியணையை அடைகிறது. இரக்கத்தின் தந்தையே! இந்த ஆன்மாக்கள் மட்டில் உமக்குள்ள அன்பையும், இவர்களிடம் உமக்குள்ள மகிழ்ச்சியையும் முன்னிட்டு, எம்மையும், உலகம் முழுவதையும் ஆசீர்வதித்தருளும். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, உமது இரக்கத்தை என்றென்றும் போற்றுவோமாக!

எல்: ஆமென்!

ஏழாம் நாள்

“இன்று, எனது இரக்கத்தைச் சிறப்பாக மகிமைப்படுத்தி வணங்கும் ஆன்மாக்களை அழைத்து வந்து, என் இதய இரக்கத்தில் மூழ்கச்செய். இவர்கள் என் பாடுகளை எண்ணி வருந்தி, என் ஆன்மாவோடு ஆழ்ந்து ஒன்றித்திருக்கிறார்கள். எனது இரக்கமுள்ள இதயத்தின் உயிருள்ள சாயல்கள் இவர்கள். இவ்வான்மாக்கள் மறுவாழ்வில் சிறப்பான ஒளியோடு துலங்குவார்கள். ஒருவரும் நரக நெருப்பிற்கு ஆளாக மாட்டார்கள். இறப்பின்வேளையில் இவர்கள் ஒவ்வொருவரையும் பாதுகாப்பேன்.”

இறை இரக்கத்தில் பக்தி கொண்டு, அதனைப் பரப்புவதன்மூலம் இயேசுவின் இரக்கம் நிறைந்த இதயத்தின் உயிருள்ள சாயலாக விளங்குவோருக்காகச் செபிப்போமாக!

முத: இரக்கம் நிறைந்த இயேசுவே! அன்பையே இதயமாகக் கொண்ட இறை இரக்கத்தின் மேன்மையை சிறப்பாகப் போற்றி வணங்கும் ஆன்மாக்களை, உமது இரக்கம் நிறைந்த இதயத்துக்குள் ஏற்றுக் கொள்ளும். இவர்கள் இறைவனிடமிருந்தே தமது சக்தியைப் பெறுகின்றனர். துன்ப துயரங்களின் நடுவே நீர் மனுக்குலத்தற்காகப் பட்ட பாடுகளில் பங்கு கொள்ள விழைகின்றார்கள். மென்மேலும் பெருகும் இரக்கத்தால் அவர்களை அரவணைத்து, விடாமுயற்சி, திடம், பொறுமை ஆகிய புண்ணியங்களை அவர்களுக்கு அளித்தருளும்.

எல்: ஆமென்!

1 கர்த்தர் கற்பித்த செபம், 1 மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்

முத: எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! உமது ஆழங்காணமுடியாத இரக்கத்தை உருக்கமாகப் போற்றி வணங்கும் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இவர்கள் சொல்லாலும், செயலாலும் உம்மை மகிமைப்படுத்துகின்றனர். இவ்வான்மாக்கள் நற்செய்தியின்படி வாழ்பவர்கள். உமது இரக்கத்தைத் தம் வாழ்வில் கடைபிடிப்பவர்கள். இவர்கள் உம்மீதும், உமது வாக்குறுதிகளிலும் கொண்டுள்ள நம்பிக்கைக்கேற்ப இவர்களுக்கு மேலான இரக்கத்தைக் காட்டுமாறு உம்மை வேண்டுகிறோம். உமது சொந்த மாட்சியைப் போன்று இவர்களது வாழ்விலும்,குறிப்பாக இறுதி வேளையிலும் இவர்களைப் பாதுகாத்தருளும்.

எல்: ஆமென்!

எட்டாம் நாள்

“இன்று, உத்தரிக்கும் தலத்தில் சிறைப்பட்டுள்ள ஆன்மாக்களைக் கொணர்ந்து என் இரக்கத்தின் ஆழத்தில் அமிழ்த்து. என் உதிரப்பெருக்கு, இவர்களைச் சுட்டெரிக்கும் தீயை குளிரச்செய்யட்டும். இவ்வான்மாக்கள் என்னால் அதிகம் அன்புசெய்யப்பட்டவர்கள். என் நீதிக்குப் பரிகாரம் செய்கின்றார்கள். இவர்களுக்கு விடுதலை அளிப்பது உன் கையில் இருக்கிறது. என் திருச்சபை அளிக்கும் எல்லா பலன்களையும் எடுத்து இவர்களுக்கு ஒப்புக்கொடு. இவர்கள் செலுத்த வேண்டிய கடனைத் தீர்ப்பாய். “

இறை நீதிப்படி உத்தரிக்கும் தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காகச் செபிப்போமாக! இரக்கமுள்ள இயேசுவின் திரு இரத்தம் அவர்களின் வேதனையைத் தணிப்பதாக!

முத: இரக்கம் நிறைந்த இயேசுவே! ‘என் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்’ என்று மொழிந்தீரே! இறைவனுடைய நீதிக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்களை இரக்கம் நிறைந்த உமது இதயத்தினுள் ஏற்றருளும். உமது இதயத்திலிருந்து பீறிட்டு வரும் உதிரமும், நீருமாகிய அருவிகள் இவர்களைச் சுற்றியிருக்கும் அனற்பிழம்புகளை அணைக்கட்டும். இதனால், எங்கும் உமது இரக்கத்தின் வல்லமை போற்றப்படுவதாக!

எல்: ஆமென்!

1 கர்த்தர் கற்பித்த செபம், 1 மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்

முத: எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! உத்தரிக்கும் ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது திருமகன் இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் பெயராலும், அவரது திரு இதயத்தில் நிறைந்த துயரத்தின் பெயராலும் உம்மை மன்றாடுகிறோம்! உமது நீதியின் தீர்ப்பினால் வேதனைப்படும் இவ்வான்மாக்களுக்காக உமது இரக்கத்தைக் காட்டியருளும். உமது திருமகன் இயேசுவின் இரக்கம், அவரது நீதியைவிட மேலோங்கி நிற்பதால் அவரது திருக்காயங்களின் வழியாக இவர்களை நோக்கியருளுமாறு உம்மை வேண்டுகிறோம்.

எல்: ஆமென்!

ஒன்பதாம் நாள்

“இன்று, இறையார்வமற்ற (வெதுவெதுப்பான) ஆன்மாக்களை என்னிடம் அழைத்து வந்து, எனது இரக்கத்தில் மூழ்கவிடு. இவ்வான்மாக்கள் என் உள்ளத்தை மிகவும் நோகச் செய்கிறார்கள். இந்த ஆன்மாக்களாலேயே நான் கெத்சமனிப் பூங்காவில் கொடிய வேதனைகளை அனுபவித்தேன். "தந்தையே! உமக்குச் சித்தமானால் இக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும்!" என்று நான் கூறியதற்குக் காரணம் இவர்கள்தாம். என் இரக்கத்தை நோக்கி ஓடி வருவதுதான் இவர்களது மீட்பின் கடைசி நம்பிக்கை.”

ஒலிவத் தோப்பில் இயேசு கிறிஸ்துவுக்கு கொடிய வேதனை ஏற்படக் காரணமாக இருந்த இறையார்வமற்ற (வெதுவெதுப்பான) ஆன்மாக்களுக்காகச் செபிப்போமாக!

முத: இரக்கம் நிறைந்த இயேசுவே! நீர் நன்மையே உருவானவர். ஒலிவத் தோப்பில் உமக்கு மிகுந்த வேதனையும், அருவருப்பும் உண்டாக்கிய நடைபிணங்களைப் போன்ற இறையார்வமற்ற (வெதுவெதுப்பான) இந்த ஆன்மாக்களை உமது இரக்கம் நிறைந்த இதயத்தினுள் ஏற்றருளும். உமது தூய அன்பின் அனற்பிழம்பில் இவர்களை மூழ்கச் செய்யும். இதனால் இவர்கள், உமது எல்லையற்ற கருணையை என்றென்றும் புகழ்வார்களாக!

எல்: ஆமென்!

1 கர்த்தர் கற்பித்த செபம், 1 மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்

முத: எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! இறையார்வமற்ற (வெதுவெதுப்புள்ள) ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது திருமகனும், எமதாண்டவருமான இயேசு கிறிஸ்துவின் கசப்பான பாடுகளின் பெயராலும், சிலுவையில் மூன்று மணிநேரமாக அவர் அனுபவித்த வேதனைகளின் பெயராலும் இந்த ஆன்மாக்களுக்கு, உமது மாட்சிமையின்மீது ஒரு புதிய ஆசையை ஊட்டுமாறு உம்மை இரந்து மன்றாடுகிறோம்! அவர்கள் உள்ளத்தில் அன்பு பெருகச் செய்தருளும். இதனால் உயிருட்டப் பெற்ற இவர்கள், உலகில் இரக்கச் செயல்களைப் புரிந்து, என்றென்றும் உமது இரக்கத்தை போற்றிப் புகழ்வார்களாக!

எல்: ஆமென்!

வாசல்