இறை இரக்க பக்தி: இறை இரக்கத்தின் செபமாலை

1. தொடக்கச் செபம்:

முத: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.

எல்: ஆமென்!

முத: இயேசுவே, நீர் என்னைச் சுகமாக்கக் காயப்பட்டீர், உம் காயங்களால் என்னைச் சுகமாக்கும். நீர் சிந்திய இரத்தத்தால் என் பாவங்களையும், என் முன்னோரின் பாவங்களையும் மன்னியும். உம் உயிர்ப்பின் வல்லமையால் தூய ஆவியை என்னில் பொழிந்தருளும். ஆண்டவரே! என்னையும், என் குடும்பத்தாரையும், எனக்கு நெருக்கமானவர்களையும் நற்கருணை நாதர் இயேசு கிறிஸ்துவின் இதயத்திற்கும், அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கும் ஒப்புக்கொடுக்கிறேன். எங்கள் வாழ்வைத் தூய்மைப்படுத்தி, புதுப்பித்து, குணமாக்கி, எங்களுக்கு பல அற்புதங்களைச் செய்தருளும்.

எல்: ஆமென்!

முத: இயேசுவே நீர் மரித்தீர். ஆனால் உமது மரணம், ஆன்மாக்களின் ஊற்றாகவும், இரக்கத்தின் கடலாகவும் திறக்கப்பட்டது. ஓ வாழ்வின் ஊற்றே! ஆழம் காண முடியாத இறைவனின் இரக்கமே! அகில உலகையும் அரவணைத்து, உமது இரக்கம் முழுவதையும் எம்மீது பொழிந்தருளும்.

முத: இயேசுவின் திரு இதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே!

எல்: நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.

எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும், ஆமென்!

மங்கள வார்த்தை செபம்:

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே!

எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும், எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும், ஆமென்!

நம்பிக்கை அறிக்கை:

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.

(“பிறந்தார்” எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்)

இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.

பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும், இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். தூய, கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். தூயவர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலைவாழ்வை நம்புகின்றேன், ஆமென்!

2. பெரிய மணியில்:

நித்திய பிதாவே! எங்கள் ஆண்டவரும், உமது அன்பு மகனுமான இயேசு கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும், ஆன்மாவையும், தெய்வீத்தையும் எங்கள் பாவங்களுக்காகவும், அகில உலகின் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

3. சிறிய மணிகளில்:

முத: இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் வழியாக…

எல்: அப்பா பிதாவே! எங்கள் மீதும் அகில உலகின் மீதும் இரக்கமாயிரும்! (10 முறை)

4. பத்து மணி முடிவில்:

தூய இறைவா! தூய எல்லாம் வல்லவரே! தூய நித்தியரே! எங்கள் மீதும், அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்! (3 முறை)

(தூய இறைவனே! தூய வல்லவரே! தூய அழிவில்லாதாவரே! எங்கள் மீதும், அகில உலகின் மீதும் இரக்கமாயிரும்!) (3 முறை)

(2, 3, 4ம் படிகளை செபமாலையின் மறை உண்மைகளைத் தியானிப்பது போல 5 முறை சொல்லவும்)

5. இறுதி செபம்:

முத: நித்திய பிதாவே, முடிவில்லாத இரக்கமும், குறைவில்லாத மனதுருக்கமுடைய பெட்டகமே, எம்மை கருணைக் கண் நோக்கி, உம் இரக்கத்தை மிகுதியாக்கும். துன்ப நேரங்களில் நாங்கள் துவண்டு விடாமல், மிகுந்த மன உறுதியோடு உம்முடைய சித்தத்திற்கு எம்மை அர்ப்பணிக்க அருள் புரியும். அதுவே உமது அன்பும், இரக்கமும் ஆகும்.

எல்: ஆமென்!

வாசல்